search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மணல் குவாரிகள்"

    கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நீடிப்பதால் அதை தவிர்க்க புதிதாக 27 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்கப்பட்டு பல மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப்படுகைகளில் 8 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த மணல் குவாரிகளால் நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மணல் குவாரிகளை ஆய்வு செய்ய கோர்ட்டு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழுவின் அறிக்கைபடி கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதன் காரணமாக மணல் குவாரிகள் மூடப்பட்டு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது. எனவே மணல் குவாரிகள் மீண்டும் தொடங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் மணல் குவாரிகளில் முறைகேடு நடக்காதவாறு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும், மணல் அள்ளப்படும் இடத்தில் இருந்து சேமிப்பு கிடங்கு வரை செல்லும் மணல் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மணல் அள்ளப்படும், ஒரு லாரிக்கு 2 அல்லது 3 யூனிட் மணல் மட்டுமே விற்பனை செய்யப்படும், ஆன்லைனில் மட்டும் மணல் புக் செய்து விற்பனை செய்யப்படும் என்ற உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டன.

    இதை ஏற்றுக் கொண்ட மதுரை ஐகோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து மாயனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயல்பட தொடங்கியது. இதுபோல் பல்வேறு இடங்களில் கோர்ட்டு அனுமதி பெற்று மணல் குவாரிகள் செயல்படத் தொடங்கின.

    இதற்கிடையே கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நீடிப்பதால் அதை தவிர்க்க புதிதாக 27 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி தஞ்சாவூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த 27 குவாரிகளும் திறக்கப்படுகிறது.

    பொதுப்பணித்துறையின் மணல் பிரிவு அதிகாரிகள் மணல் எடுப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றும், மணல் குவாரிகள் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் அனுமதி பெற்றும் இந்த மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

    இதில் தஞ்சை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட்டு விடும். மற்ற குவாரிகள் படிப்படியாக வருகிற ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டு விடும் என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் கட்டுமானப் பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 12,000 லோடுகள் வரை மணல் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக 9 இடங்களில் மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. மற்ற 18 இடங்களிலும் விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது ஒரு கன அடி ஆற்று மணல் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. அரசு டெப்போக்களில் 2 யூனிட் மணல் (200 கன அடி) ரூ.1,350-க்கு விற்கப்படுகிறது.

    தற்போது ஒவ்வொரு குவாரியில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 350 முதல் 400 லோடுகள் வரை மணல் சப்ளை செய்யப்படுகிறது. புதிய மணல் குவாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 35,000 முதல் 40,000 லோடுகள் வரை மணல் கிடைக்கும். இதன் மூலம் மணல் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு 15,000 லோடுகள் மணல் கடத்தப்பட்டு வந்தன. அவை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், தமிழ் நாட்டின் தேவைக்கு கூடுதல் மணல் லோடுகள் சப்ளையாவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 15 குவாரிகளில் இருந்து 3,000 லோடுகள் மணல் மட்டுமே கிடைப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் இருந்து 10,000 லோடுகள் மணல் வரை கிடைக்கும் என்றும் அதன் மூலம் மணல் தட்டுப்பாடு ஓரளவு குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×